பணி நிரந்தரம் செய்யக்கோரி அனுமதியின்றி கோட்டை நோக்கி சென்ற தூய்மைப் பணியாளர்கள் கைது
தண்டையார்பேட்டை, ஜூலை 10: நாடு முழுவதும் நேற்று பொது வேலை நிறுத்தம் நடந்தது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி வழக்கறிஞர் கு.பாரதி தலைமையில் பாரிமுனை குறளகத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணியாக சென்று தமிழக முதல்வர், துணை முதல்வரை நேரில் சந்தித்து அவர்களிடம் கோரிக்கை மனு வழங்க 1000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வந்தனர். இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் தடையை மீறி அவர்கள் செல்ல முயன்றதால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.
இதேபோல், புதிய தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெறவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும்பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கம், இந்திய வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயகம் மாதர் சங்கம், மாணவர் சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து நேற்று கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட 200 க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி 100க்கும் மேற்பட்டோர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர், அனைவரையும் வேனில் ஏற்றி தண்டையார்பேட்டை வினோபா நகரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், மாலையில் அனைவரையும் விடுவித்தனர். 100க்கும் மேற்பட்டோர் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.