கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
சேலம், செப்.30: சேலம் மாவட்டத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தில் வருவாய்த்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் போராட்டத்தை தொடங்கினர். அதன்படி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் நேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதேபோல் தாலுகா அலுவலகம், ஆர்ஐ அலுவலகங்களில் பணியாற்றுவோரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி கூறுகையில், ‘‘வருவாய்த்துறையினர் 9 அம்ச கோரிக்கையை முன்வைத்து பல்வேறு கட்ட போராட்டம் செய்து வருகிறோம். இதனை வலியுறுத்தி இன்றும், நாளையும் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுகிறோம். இப்போராட்டத்தில், சேலம் மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பணியாற்ற கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். வருவாய்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற ேவண்டும். இதனை வலியுறுத்தி வரும் 6ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையாளர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்,’’ என்றார்.