குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
நரசிங்கபுரம், செப்.27: நரசிங்கபுரம் நகராட்சி 10வது வடக்கு தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சேலம்- சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட 10வது வார்டு வடக்கு தில்லை நகர் பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகினறனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் சரவர விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து பல முறை நகராட்சி அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும், சீரான குடிநீர் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் சிரமப்பட்டனர். இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் சேலம் -சென்னை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த ஆத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் அழகுராணி, நகரராட்சி பொறியாளர் ஜெயமாலதி ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து, சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனால் சமாதானம் அடைந்த பெண்கள், மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து நகராட்சி கமிஷனர் குடிநீர் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுத்தார். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.