சேலத்தில் பரவலாக மழை
சேலம், நவ.25: சேலம் மாவட்டத்தில் நேற்று காலை பரவலாக மழை பெய்தது. ஆத்தூர் பகுதியில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 258 மி.மீ., மழை பதிவானது.
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக கடந்த 3 நாட்களாக தென் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் இடைவிடாது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை தொடங்கிய கனமழை, பெரும்பாலான இடங்களில் நேற்று காலை வரை நீடித்தது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் அதிகளவு மழை கொட்டி தீர்த்தது.
மாநிலத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்படியே சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்தது. நேற்று காலை ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், மக்களால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. இதன்காரணமாக ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளிப்பதாக மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி அறிவித்தார். காலை 7.50 மணிக்கு வெளியான இந்த அறிவிப்பையடுத்து, அந்த 4 தாலுகாவில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் செயல்படவில்லை.
சில பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் வந்தநிலையில் வீட்டிற்கு திரும்பிச் சென்றனர். இந்த மழையானது, சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது. சேலம் மாநகரில் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதேபோல், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, இடைப்பாடி, சங்ககிரி பகுதியிலும் மழை பெய்தது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள் மற்றும் கார், டூவீலர்களில் வேலைக்கு புறப்பட்ட மக்களும் கடும் அவதியடைந்தனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி சேலம் மாவட்டத்தில் மொத்தமாக 258.70 மில்லி மீட்டருக்கு மழை பதிவானது. இது ஏரியா வாரியாக சேலம்-1.1, ஏற்காடு-4.2, வாழப்பாடி-18, ஆத்தூர்-38, கெங்கவல்லி-18, தம்மம்பட்டி-17, ஏத்தாப்பூர்-15, வீரகனூர், 33, நத்தக்கரை-62, சங்ககிரி-25, டேனிஷ்பேட்டை-18 மில்லி மீட்டர் என பதிவாகியிருந்தது.