பியூட்டி பார்லர் பூட்டை உடைத்து நைட் டிரஸ்களை திருடிய கும்பல்
சேலம், நவ.25: சேலம் அருகே பியூட்டி பார்லரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், கவரிங் நகை, நைட் டிரஸ்களை திருடிச் சென்றனர். சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவா (51). இவர், கருப்பூர் தண்ணீர்தொட்டி பஸ் நிறுத்தப்பகுதியில் இருக்கும் கந்தா காம்ப்ளக்சில் கவரிங் நகை விற்பனை கடை மற்றும் பியூட்டி பார்லரை நடத்தி வருகிறார். கடந்த 17ம் தேதி கடையை பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றார். அடுத்தநாள் காலையில் கடைக்கு சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு பியூட்டி பார்லர் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, கவரிங் நகை செட்-2, நைட் டிரஸ்-25, சல்வார், லெக்கின்ஸ்-40, ரூ.3,500 பணம் ஆகியவை திருடு போயிருந்தது. நள்ளிரவு நேரத்தில் இத்திருட்டில் மர்மநபர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதுபற்றி கருப்பூர் போலீசில் சிவா புகார் கொடுத்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இத்திருட்டில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே அதே தண்ணீர்தொட்டி பஸ் நிறுத்தப்பகுதியில், முருகன் என்பவருக்கு சொந்தமான லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் பணம், லேப்டாப் திருட்டு போயிருந்தது. அத்திருட்டில் ஈடுபட்ட பூவரசன், கண்ணன், பீர் மைதீன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். அந்த நபர்களுக்கு இத்திருட்டில் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். பியூட்டி பார்லருக்குள் புகுந்து நைட் டிரஸ்களை திருடிச் சென்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.