தொழிலாளி வீட்டில் வெள்ளி பொருட்கள்
ரூ.10 ஆயிரம் திருட்டுசேலம், செப்.19: சேலத்தை அடுத்துள்ள கருப்பூர் 13வது வார்டு பணங்காடு தனியார் காஸ் கம்பெனி அருகில் வசித்து வருபவர் சூர்யா (28). இவரது மனைவி கௌசல்யா (23). இவர்களது வீட்டில் நேற்று முன்தினம் மின்விசிறி பழுதடைந்துள்ளது. இதனால், வீட்டை பூட்டிவிட்டு, தனது குழந்தையுடன் சூர்யா, கௌசல்யா ஆகியோர் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளனர். அடுத்தநாளான நேற்று காலை, அவர்களது வீட்டின் கதவு திறக்கப்பட்டு கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கௌசல்யா, உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோவை உடைத்து, அதனுள் இருந்த ரூ.10 ஆயிரம் பணம், வெள்ளி கொலுசு, மெட்டி ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றிருந்தனர். இதுபற்றி கருப்பூர் போலீசில் கௌசல்யா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர்.