ஆத்தூர் பகுதிகளில் அதிகவனமாக அரசு பஸ்களை டிரைவர்கள் இயக்க வேண்டும்
கெங்கவல்லி, செப்.17: ஆத்தூர் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன், செல்லியம் பாளையம் பகுதியில் அரசு பஸ் அதிக வேகமாக டிரைவர் ஓட்டி வந்துள்ளார். இதில் பொதுமக்கள் மீது மோதுவது போல் சென்றதால், அவ்வழியாக சென்ற மக்கள் பஸ்சை சிறை பிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பஸ்சில் பயணித்த பயணிகள் டிரைவரை திட்டி உள்ளனர். இந்த சம்பவம் வலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து ஆத்தூர் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராஜா, அனைத்து அரசு பஸ் டிரைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதில் ஆத்தூர் மையப் பகுதியான அரசு மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், காமராஜனார் ரோடு, உடையார் பாளையம், விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகளை கவனமாக இயக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல், விபத்தை ஏற்படுத்துவது போல் இல்லாமல் பஸ்சை இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.