கழிவுநீர் தேங்கியதால் விஏஓ ஆபீசுக்கு பூட்டு
தாரமங்கலம், ஆக.15: தாரமங்கலம் பஸ் நிலையம் அருகே கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. இதில் விஏஓ வரதராஜன், உதவியாளர் வெங்கடேசன் பணியாற்றி வருகின்றனர். நகராட்சி 28 வார்டு மற்றும் கசுவரெட்டியபட்டி பகுதிகளில் உள்ளவர்கள் பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ், முதியோர் உதவி தொகை, வருமான சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளுக்காக நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். நேற்று சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்தது. சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால், கழிவு நீர் விஏஓ அலுவலகத்தை சூழ்ந்தது. இதனால், அலுவலகத்தில் இருந்த விஏஓ, உதவியாளர் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வெளியே வந்தனர். அதன் பிறகு அலுவலகத்தை இழுத்து பூட்டி விட்டு அதிகாரிகள் சென்றனர். அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.