3 ஏரிகளுக்கு உபரிநீரை திருப்பி விட வேண்டும்
சேலம், ஆக.14:மேட்டூர், ஓமலூர் பகுதியில் உள்ள 3 ஏரிகளுக்கு காவிரி உபரிநீரை திருப்பி விட்டு நிரப்ப வேண்டும் என கலெக்டரிடம் அதிமுக எம்எல்ஏ மணி கோரிக்கை மனு கொடுத்தார். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மாலை, ஓமலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ மணி தலைமையில் காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் சுரேஷ், நிர்வாகிகள் சண்முகவேல், பாலாஜி, சீனிவாசன் உள்ளிட்டோர் வந்தனர். அவர்கள், கலெக்டர் பிருந்தாதேவியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
பின்னர் வெளியே வந்த மணி எம்எல்ஏ நிருபர்களிடம் கூறுகையில், ‘மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் காவிரி உபரிநீரை, நீரேற்று திட்டம் மூலம் வறண்ட ஏரிகளுக்கு கொண்டு வந்து நிரப்புகின்றனர். இந்த வகையில், பாப்பாத்திக்காடு பகுதியில் இருந்து வைரனேரிக்கு கால்வாய் பணி நிறைவடைந்து விட்டதால், அந்த ஏரிக்கு உபரிநீரை கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அந்த ஏரி நிரம்பிவிட்டால், அரியாகவுண்டம்பட்டி ஏரி, செலவடை ஏரிக்கு திருப்பி விட முடியும். அந்த 3 ஏரிகளையும் உபரிநீரை கொண்டு நிரப்பி, சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தினோம். இக்கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக கூறியுள்ளார்,’ என்றார்.