நிலக்கடலை பண்ணை பள்ளி பயிற்சி முகாம்
ஓமலூர், டிச.12: ஓமலூர் வட்டாரம் மைலப்பாளையம் கிராமத்தில் 25 விவசாயிகளுக்கு நிலக்கடலையில் சிறந்த வேளாண்மை தொழில்நுட்ப நடைமுறைகள் குறித்த பண்ணை பள்ளி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் ஓமலூர் வேளாண்மை உதவி இயக்குநர் தவமணி கலந்து கொண்டு, வேளாண்மை துறை திட்டங்கள், நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் குறித்து விரிவாக பேசினார். ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குநர் பழனியப்பன், மண் மாதிரி சேகரித்தல், உயிர் உரங்கள் பயன்பாடுகள், ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல், நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து, வயல் வெளியிலேயே செயல் விளக்கம் செய்து விரிவாக எடுத்துரைத்தார். இதில், வட்டார தொழில்நுட்ப மேலாளர் இந்துமதி, அட்மா திட்ட நோக்கம் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணியான டிரைக்கோ டெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்தல் குறித்து செயல் விளக்கமளித்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை தொழில்நுட்ப மேலாளர்கள் பிரவீன்குமார், ஞானவேல் ஆகியோர் செய்திருந்தனர்.