சேலம் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
சேலம், ஆக.12: சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. வரும் 15ம் தேதி சுதந்திர தினம் நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் காந்தி ஸ்டேடியத்தில் விழா கொண்டாடப்படுகிறது. கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினரை கவுரவிக்கிறார். பணியில் வீர, தீர சாகசங்கள் புரிந்த போலீசார்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார். பணியில் சிறந்து விளங்கிய ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவ்விழாவின்போது போலீசாரின் அணிவிகுப்பு நிகழ்ச்சி, பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. விழாவிற்கு இன்னும் 3 நாட்களே இருக்கும்பட்சத்தில் சேலம் காந்தி ஸ்டேடியத்தில் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு நேற்று காலை சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு அணிவகுப்பு ஒத்திகையை நடத்தினர்.