கயிறு தயாரிக்கும் நார் மில்லில் தீ விபத்து
ஓமலூர், அக்.9: ஓமலூர் அருகே கயிறு தயாரிக்கும் நார் மில்லில் வெல்டிங் வேலை செய்யும் போது ஏற்பட்ட தீப்பொறியால் நார் மில் இயந்திரம் தீப்பற்றி எரிந்தது.
ஓமலூர் அருகே உள்ள திண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் பிரபு (45). இவர் அதே பகுதியில் தேங்காய் நாரிலிருந்து கயிறு தயாரிக்கும் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் நார் மில்லில் உள்ள இயந்திரத்தில் பழுது பார்க்கும் பணி செய்துள்ளனர். தொடர்ந்து இயந்திரத்திற்கு வெல்டிங் வைக்கும் பணி நடைபெற்றபோது தீப்பொறி பட்டு இயந்திரத்தில் தீப்பிடித்தது.
அந்த தீ, அருகிலிருந்த கழிவுநார் முழுவதும் பற்றி எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் ஓமலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில், ஓமலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையிலான வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து தொளசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.