கால்வாய் பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து அபாயம்
இடைப்பாடி, நவ.7: அரசிராமணி பேரூராட்சி மூலப்பாதை பகுதியில் கிழக்கு கரை கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயின் குறுக்கே பட்டக்காரனூர் செல்ல பாலம் கட்டப்பட்டுள்ளது. பட்டக்காரனூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும், கால்வாய் பாலத்தில் வழியாக செல்கிறது. பள்ளி, கல்லூரி வாகனங்கள், விவசாயிகள் இடுபொருட்கள், அறுவடை செய்த பயிர்கள், காய்கறிகளை கொண்டுசெல்ல பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கால்வாய் பாலத்தின் ஒருபுறம் பாதுகாப்பிற்காக கட்டப்பட்டு இருந்த தடுப்புசுவர் முற்றிலுமாக இடித்து கால்வாய் தண்ணீரில் விழுந்து அடித்து செல்லப்பட்டது. இதனால், ஒருபுறம் மட்டுமே தடுப்பு சுவர் உள்ளது. இரவு நேரங்களில் கால்வாய் பாலத்தின் மீது வாகனங்களில் செல்பவர்கள், மற்ற வாகனங்களுக்கு ஒதுங்கும்போது தவறி கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாய் பாலத்தை நேரில் பார்வையிட்டு, புதிதாக தடுப்பு சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க ணே்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.