ஆத்தூரில் புகையிலை விற்ற மளிகை கடைகளுக்கு சீல்
கெங்கவல்லி, நவ.7: ஆத்தூரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல்வைத்த உணவு பாதுகாப்பு அலுவலர், தலா ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார். ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்வதாக தகவல் கிடைந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் ரத்தினம் தலைமையிலான குழுவினர், ஆத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள பீடா கடை, அலெக்சாண்டர் தெரு, கோட்டை பகுதியில் உள்ள மளிகை கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து 3 கடைகளுக்கும் சீல் வைத்த அதிகாரிகள், தலா ரூ.25 ஆயிரம் வீதம், கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். இந்த ஆய்வின் போது, ஆத்தூர் நகர எஸ்ஐ சிவசக்தி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.