தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சுப்போட்டி
சேலம், டிச.4: சேலம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது. சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், 2025ம் ஆண்டு காந்தியின் பிறந்த நாளையொட்டி வரும் 9ம் தேதியும், நேரு பிறந்த நாளையொட்டி வரும் 10ம் தேதியும், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள், சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பேச்சுப்போட்டிகள் காலை 9.30 மணி முதல் தொடங்கி மதியம் 1.00 மணி வரை சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப்போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்பட உள்ளது. மேலும் சிறப்பு நேர்வாக அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தெரிவு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2000 வீதம் வழங்கப்படவுள்ளது. டிசம்பர் 9ம்ேததி, பள்ளி மாணவர்களுக்கு காந்தி கண்ட இந்தியா, சத்திய சோதனை, வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு காந்தி நடத்திய தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், மதுரையில் காந்தி என்ற தலைப்பிலும் போட்டிகள் நடக்கிறது.
டிசம்பர் 10ம்தேதி பள்ளி மாணவர்களுக்கு இந்தியாவின் விடிவெள்ளி ஜவஹர்லால் நேரு, குழந்தைகளை விரும்பிய குணசீலர், பஞ்சசீலக் கொள்கை என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு சுதந்திர போராட்டத்தில் நேரு, நேருவின் வெளியுறவு கொள்கை, நேரு கட்டமைத்த இந்தியா என்ற தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம். எனவே, பள்ளி மாணவ, மாணவிகள் தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழியாக இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்கலாம். கல்லூரி மாணவர்கள் கல்லூரி இணை இயக்குநர் வழியாக, விண்ணப்பங்கள் முதல்வரின் அனுமதியுடன் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துணை இயக்குநர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் (அறை எண் 203) 0427-2417741 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.