ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
சேலம், டிச.2: சேலம் செவ்வாய்பேட்டை லாரி ஸ்டாண்ட் அருகேயுள்ள ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேலம் செவ்வாய்பேட்டை லாரி ஸ்டாண்ட் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு, தற்போது வாகன ஓட்டிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மேம்பாலத்திற்கு அருகே ரயில்வே தரைப்பாலமும் அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலத்தில் மழைநீர், சாக்கடை கழிவுநீர் அதிகளவில் தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத அளவில் இருந்தது. இந்த நீரை அப்புறப் படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டனர்.
அதன் அடிப்படையில் தரைப்பாலத்தில் தேங்கிய மழைநீர் மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்பட்டது. அதன்பின்பு தரைப்பாலத்தை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் தரைப்பாலத்தில் மழைநீர் தேங்கி இருக்கிறது. இவை நாள் கணக்கில் வடியாமல் அப்படியே உள்ளது. இதனால் தரைப்பாலத்தில் வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே தரைப்பாலத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.