இடைப்பாடியில் 880 கிலோ கஞ்சா அழிப்பு
இடைப்பாடி, ஆக.13: காவல் துறை சார்பில், இடைப்பாடியில் உள்ள தனியார் நிறுவன கிடங்கில் 880 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில், போலீசார் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தினர். இதில், சாராயம் மற்றும் புகையிலை பொருட்கள், குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியிலிருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலம் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக எழுந்த புகாரின்பேரில், போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை போலீசார் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாநகரம் முழுவதும், காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் தங்காயூர் ஊராட்சி கோனமோரி பகுதியில் உள்ள மருத்துவ கழிவுகளை அழிக்கும் தனியார் கிடங்கிற்கு மொத்தமாக கொண்டு வந்தனர். பின்னர், மாநகர காவல் துணை ஆணையர் கீதா தலைமையில், சேலம் மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில், கைப்பற்றப்பட்ட 880 கிலோ கஞ்சா தீயில் போட்டு அழிக்கப்பட்டது.