அறிவுசார் மையத்தை அமைச்சர் நேரில் ஆய்வு
வாழப்பாடி, அக்.26: அயோத்தியாபட்டணம் அருகே, காரிப்பட்டி 4வது வார்டு பகுதியில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அறிவுசார் மையத்தை, நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். அப்போது, திமுக மாவட்ட பிரதிநிதி பொன்னுமலை, மணி, அதிகாரிகள் உடனிருந்தனர். இதை தொடர்ந்து, வாழப்பாடி அருகே பேளூரில் தாட்கோ வணிக வளாக கட்டிடப் பணிகள் குறித்து அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். அப்போது, பேளூர் பேரூராட்சி திமுக, அதிமுக வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து கட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் திரண்டு வந்து அமைச்சரிடம் முறையிட்டனர்.
அதில், வாரச்சந்தையில் வியாபாரிகளுக்கும், வணிகர்களுக்கும் போதிய இடவசதி இல்லாத நிலையில், தாட்கோ வணிக வளாகம் கட்டுவதற்கும் போதிய இடவசதி இல்லை. இதனால், புதிய பஸ் நிலையத்தில் வாரச்சந்தை கூடுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். பஸ்கள் பேருந்து நிலையத்திற்குள் செல்வதற்கு இடையூறாக இருப்பதால், மாற்று இடத்தில் இக்கட்டிடத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அதனைத் தொடர்ந்து, அமைச்சர் மதிவேந்தன், மாற்று இடத்தில் கட்டிடம் கட்ட பரிசீலனை செய்யுமாறு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, வேலூர் நகர திமுக செயலாளர் சுப்ரமணியன், பேளூர் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயசெல்வி பாலாஜி, வார்டு கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.