குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
சேலம், நவ.15: சேலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிருந்தாதேவி துவக்கி வைத்தார். சேலத்தில் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மற்றும் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில், தேசிய குழந்தைகள் தினம், நவம்பர்-19 உலக குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமைகள் தடுப்பு தினம் மற்றும் நவம்பர்-20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகியவற்றை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ெதாடங்கிய பேரணியை, கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இப்பேரணி, திருவள்ளுவர் சிலை, பழைய பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை, பெரியார் சிலை மற்றும் சேலம் மாநகராட்சி அலுவலகம் வழியாக வந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறைவுபெற்றது.
பேரணி முடிவில் குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேரணியில் நீல நிறத்தில் உடையணிந்து 18 வயதிற்கு மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு மாவட்ட நிலை அலுவலர்கள், மருத்துவ துறையினர், காவல் துறையினர், சமூக நலத்துறை பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக குழந்தைகள் தின விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் பிருந்தாதேவி வாசிக்க, அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் கஷ்மீர்ராஜ், குழந்தைகள் நலக்குழு தலைவர் எழில் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.