178 பள்ளிகளை சேர்ந்த 25,159 மாணவர்களுக்கு சைக்கிள்
சேலம், நவ.15: சேலம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 178 பள்ளிகளைச் சேர்ந்த 25,159 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த நான்கரை ஆண்டுகளாக பள்ளிக் கல்வித்துறைக்கென அதிகளவிலான நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, குழந்தைகளுக்கான முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் தொடங்கி, எதிர்கால தலைமுறையினராகிய மாணவ, மாணவிகள் உலகளாவிலான கல்வியைக் கற்று பயனடையும் வகையில் நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்.
இதுமட்டுமின்றி விலையில்லா பாடபுத்தகம், சீருடை, மடிகணினி, காலணி, சைக்கிள், கணித உபகரண பெட்டிகள், மழைக்கோட் உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நடப்பு 2025-2026ம் கல்வியாண்டிற்கு பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, காணொலிக்காட்சி வாயிலாக மாநிலம் முழுவதும் 2025-2026ம் ஆண்டிற்கான சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் வேம்படிதாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். எம்பிக்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு, வேம்படிதாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 84 மாணவர்களுக்கும், 77 மாணவிகளுக்கும் என, மொத்தம் 161 சைக்கிள்களை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் கடந்த 2021-2022ம் கல்வி ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற 51,058 மாணவர்களுக்கும், 55,123 மாணவிகளுக்கும் என மொத்தம் 1,06,181 பேருக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 178 பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் 11,317 மாணவர்களுக்கும், 13,842 மாணவிகளுக்கும் என மொத்தம் 25,159 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படவுள்ளது.
இதன் தொடக்கமாக இன்று, வேம்படிதாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 161 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் நடப்பாண்டிற்கான சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு அரசால் செயல்படுத்தக்கூடிய இதுபோன்ற பல்வேறு திட்டங்களை பள்ளி மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வில் சிறந்த நிலையை அடைய வேண்டும். இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரன் பேசினார்.
முன்னதாக வேளாண்மைத்துறையின் சார்பில் தார்பாலின், பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பரிசு, தானியங்கி முறையில் நுண்ணீர் பாசன தொகுப்பு மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை வண்டி என மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.1,88,360 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் தலா ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பில் 16 கழிவுகள் சேகரிக்கும் வாகனங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சின்னுசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மஞ்சுளா, பள்ளி தலைமையாசிரியர் அமுதா மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், வீரபாண்டி வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ராமாபுரம் சதீஷ்குமார், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் வெண்ணிலா சேகர், பிடிஏ தலைவர் திருமூர்த்தி உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.