மினி லாரி மீது டூவீலர் மோதி தொழிலாளி பலி
கெங்கவல்லி, அக்.12:ஆத்தூர் அருகே அப்பமசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை பிள்ளை(55). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி(50) என்பவரும், பந்தல் போடும் தொழில் செய்து வந்தனர். நேற்று சிறுவாச்சூர் பகுதியில் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து, இருவரும் ஊருக்கு செல்வதற்காக டூவீலரில் தென்னங்குடிபாளையம் மேம்பாலத்தில் நேற்றிரவு 7 மணியளவில் வந்துள்ளனர். அப்போது, சேலம் சென்ற மினி லாரி பஞ்சராகி நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. லாரி நிற்பது தெரியாமல் அதன் பின்புறம் டூவீலர் மோதியதில் டூவீலர் ஓட்டி வந்த பிச்சைபிள்ளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்புறம் அமர்ந்து வந்த பொன்னுசாமி காயமடைந்த நிலையில், அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.