அகல் விளக்கு தயாரிப்பு தீவிரம்
ஓமலூர், நவ.11: ஓமலூர் வட்டாரத்தில் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. ஓமலூர், முத்துநாயக்கன்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. டிசம்பர் 3ம்தேதி நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவிற்காக விளக்கு தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சில இடங்களில் இயந்திரம் மூலம் அகல்விளக்கு தயாரித்து வருகின்றனர். தற்போது தொடர் மழை பெய்வதாலும், களிமண் விலை உயர்வு காரணமாக தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். முத்துநாயக்கன்பட்டி அருகே விநாயகர் சிலை உற்பத்தி செய்த தொழில் கூடத்தில் தற்போது அகல் விளக்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விதவிதமான விளக்குகள் உற்பத்தி செய்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ரகத்தை பொருத்து ஒரு விளக்கு 1 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனையாகிறது.