பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி தொழிலாளர்கள் போராட்டம்
தேனி, ஜூலை 23: தேனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் பேயத்தேவன் முன்னிலை வகித்தார். தேனி மாவட்ட செயலாளர் சமூக நாதன் போராட்டத்தை துவக்கி வைத்தார்,
போராட்டத்தின் போது, 20 ஆண்டு காலம் பணி முடித்த வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும், கணினி இயக்குநர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வு மற்றும் கிராம ஊராட்சியில் பணிபுரிகின்ற சுகாதார ஊக்குநர்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குநர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமும் ஆண்டு ஊதிய உயர்வும், அகவிலைப்படியும் வழங்கிட வேண்டும். கொரோனா காலங்களில் பணியாற்றிய மேல்நிலைத் தொட்டி பணியாளர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனா ஊக்கத் தொகையை தர வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.