சிறுபான்மையினருக்கு ரூ.25 ஆயிரம் மோட்டார் தையல் இயந்திரங்கள்
ஊட்டி, ஜூலை 8: ஊட்டியில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த 5 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் மின்மோட்டார் தையல் இயந்திரங்களை கலெக்டர் வழங்கினார். ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவிதொகை, வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 201 மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான வைப்பு பத்திரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த 5 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.25 ஆயிரம் மதிப்பில் மின் மோட்டார் தையல் இயந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
மேலும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற 2025-26ம் ஆண்டிற்கான பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற சிஎஸ்ஐ., சிஎம்எம்., மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, சமூக பாதுகாப்பு திட்டம் (தனித்துணை ஆட்சியர்) ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பழனிசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.