பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
பாலக்கோடு, மார்ச் 6: பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பவுனேசன் மகள் அஞ்சலி (23). பட்டதாரியான இவர், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில், நல்லம்பள்ளி அடுத்து ஊத்துப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயராமன் மகன் சந்தோஷ் (23) வேலை செய்து வந்தார். இருவரும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து வந்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 1ம் தேதி, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ஓசூர் முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு, நண்பரின் வீட்டில் தங்கி இருந்தனர். நேற்று பாலக்கோடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதையடுத்து இருவரின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். ஆனால் பெண்ணின் பெற்றோர் மட்டுமே காவல் நிலையத்திற்கு வந்தனர். சந்தோசின் பெற்றோர் காவல் நிலையத்திற்கு வராத நிலையில், மணமக்கள் விருப்பத்தின்படி, அஞ்சலியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.