குறைந்த மின் அழுத்தத்தை கண்டித்து சாலை மறியல்
அரியலூர், ஜூலை 23: அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த கோவிலூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள குறைந்தளவு மின் அழுத்தத்தைக் கண்டித்து, பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவிலூர் கிராமத்தில், கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள குறைந்த மின் அழுத்தம்(லோ வோல்டேஜ்) காரணமாக மின் சாதனம், மோட்டார் பம்ப் போன்றவற்றை இயக்க முடியாமல், அப்பகுதிவாசிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்சார துறை அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், செவ்வாய்க்கிழமை கிராமத்துக்கு வந்த அரசுப் பேருந்தை மறித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருமானூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் ஏலாக்குறிச்சி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் 15 நாட்களுக்குள் புதிய மின்மாற்றி அமைத்து, மின்பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனர். பொதுமக்களின் சாலை மறியலால் கோவிலூர் - ஆண்டிப்பட்டக்காடு சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.