முடிகணம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை
க.பரமத்தி, ஜூலை 14: க.பரமத்தி ஒன்றியம் அணைப்பாளையம் ஊராட்சியில் முடிகணம் கிராமம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பணி நிமித்தமாக தினந்தோறும் கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.
இவர்கள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல கரூர் சின்னதாராபுரம் நெடுஞ்சாலையில் முடிகணம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஏற வேண்டும். பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், கொளுத்தும் வெயிலிலும், மழைக்காலத்தில் மழையில் நனைந்தபடியும் பொதுமக்கள் பல மணி நேரம் வெட்டவெளியில் நிற்க வேண்டியுள்ளது. இதனால் பல்வேறு சிரமத்திற்குள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.
எனவே முடிகணம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் இதுவரை நிழற்குடை அமைக்கவில்லை. இனிமேல் மழைக்காலம் தொடங்கும் என்பதால்முடிகணம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.