அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை
உத்தமபாளையம், ஜூலை 2:உத்தமபாளையம் தாலுகா தலைமை அரசு மருத்துவமனை நூறு வருடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப 12 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் இங்கு நான்கு மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மருத்துவர்கள் பற்றாகுறையால், இரவில் சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் மகப்பேறு சிகிச்சை பிரிவு மூடப்பட்டு விட்டதால், கர்ப்பிணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளானர்.
இதுகுறித்து உத்தமபாளையம் பொதுமக்கள் கூறுகையில், உத்தமபாளையம் அரசு மருத்துவமனை, அதிகமான வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகளில் ஒன்றாக உள்ளது இதில் தற்போது நான்கு டாக்டர்கள் வரை பணியில் இருந்தாலும் பிரசவம் நடப்பதில்லை. பிரசவம் பார்க்க கம்பம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மகப்பேறு சிகிச்சை பிரிவுக்கு மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.