சீர்காழியில் அந்தியோதியா ரயில் நின்று செல்ல கோரிக்கை
சீர்காழி, ஜூலை 8: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அன்பழகன் ஆய்வு செய்தார். மேலும், ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும், குடிநீர் வசதி குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர், பயணிகள் ஓய்வறை, ரயில் நிலைய அலுவலர் அறை ஆகியவற்றை பார்வையிட்டார்.
முன்னதாக சீர்காழி ரயில் பயனாளர்கள் சங்கம், மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கோட்ட மேலாளர் அன்பழகனுக்கு வரவேற்பு அளிக் கப்பட்டது. அப்போது கோட்ட மேலாளரிடம் சீர்காழியில் அந்தியோதயா ரயில், மன்னை விரைவு ரயில் நின்று செல்ல வலியுறுத்தியும், சீர்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் கோரிக்கை விடுத்தனர். ஆய்வின்போது, ரயில் நிலைய அதிகாரி ரவிக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.