பழமை வாய்ந்த ஆலமரம் மறுநடவு
ஆர்.கே.பேட்டை, ஜூலை 10: ஆர்.கே.பேட்டை அடுத்த கோபாலபுரம் சாலை விரிவாக்க பணியின்போது அகற்றப்பட்ட 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் மாற்று இடத்தில் நடவு செய்யப்பட்டது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம், திருத்தணி கோபாலபுரம் ஊராட்சியில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, திருத்தணி - சித்தூர் சாலையில் சாலை விரிவாக்கப் பணியின்போது, சாலையோரத்தில் இருந்த 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தை வேரோடு அப்புறப்படுத்தினர். ஆனால் அந்த ஆலமரம் மீண்டும் துளிர ஆரம்பித்தது. எனவே பழமை வாய்ந்த இந்த ஆலமரத்தை அங்கிருந்து, சிறிது தூரம் தள்ளி மாற்று இடத்தில் நட்டு பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை பள்ளிப்பட்டு உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் நரசிம்மன் தலைமையில், 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் நேற்று மாற்று இடத்தில் நடவு செய்யப்பட்டது. அந்த ஆலமரத்திற்கு, பொதுமக்கள் மஞ்சள் பூசி குங்குமமிட்டு பூஜை செய்தனர்.