திருத்தேர் வலை கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ஆர்.எஸ்.மங்கலம், ஜூலை 30: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருத்தேர் வலை கிராமத்தில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்ட முகாம் நடைபெற்றது. தமிழக அரசு பொதுமக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி தீர்வு கண்டு வருகிறது. அந்த வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு திட்டம் ஒன்றை அறிவித்து அத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15ம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் நகர்புறங்களில் நடைபெறும் முகாம்களில் 13 துறைகள் மூலமாக 43 சேவைகளும், கிராமப்புறங்களில் நடைபெறும் முகாம்களில் 15 துறைகள் மூலமாக 45 சேவைகளும் பெற முடியும். பொதுமக்கள் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் பெறும் வகையில் அனைத்து துறையினரும் முகாம் நடைபெறும் இடத்திற்கே வருகை தந்து பொதுமக்களுக்கு சேவை வழங்குவதால் இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருத்தேர்வளை கிராமத்தில் நடைபெற்ற முகாமில் ஆய்ங்குடி, திருத்தேர்வளை, கோவிந்தமங்கலம், செவ்வாய்பேட்டை ஆகிய 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல், கணினி திருத்தம், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு கோரிக்கை மனுக்களை அளித்தனர். இம்முகாமில் வட்டாட்சியர் அமர்நாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், லிங்கம், அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர்.