மயானத்திற்கு பாதை கோரி மனு
சிவகங்கை, ஆக.29: காளையார்கோவில் அருகே கழுகாடி கிராம ஆதிதிராவிட மக்கள் மயானத்திற்கான பாதை கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: காளையார்கோவில் ஒன்றியம், சேதாம்பல் ஊராட்சி, கழுகாடி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் இனத்தை சார்ந்தவர்கள் இறந்தால் இறந்தவர்கள் உடலை கொண்டு செல்ல நூற்றாண்டுக்கும் மேலாக குறிப்பிட்ட பாதையை பயன்படுத்தி வந்தோம். அரசு புறம்போக்கு பாதையாக இருந்த அப்பாதையை தற்போது தனியார் சிலர் ஆக்கிரமித்து அதற்கு பட்டா பெற்றுள்ளோம். எனவே இந்த பாதையில் உடலை கொண்டு செல்லக்கூடாது என கூறுகின்றனர். இதனால் இறந்தவர்கள் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லை. எனவே ஏற்கனவே நாங்கள் பயன்படுத்தி வந்த பாதையை ஆக்கிரமித்த நபர்களிடம் இருந்து மீட்டு மயானத்திற்கு நிரந்தர பாதை வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.