ராமநாதபுரம் நகராட்சியில் அக்.27ல் சிறப்பு கூட்டம்
ராமநாதபுரம், அக்.26: ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ராமநாதபுரம் நகராட்சி சார்பில் நகர்புற உள்ளாட்சி பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சேவைகளை மேம்படுத்திட அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடக்கிறது. நகராட்சி அலுவலர் ஒருவரை கூட்டுநராக கொண்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையிலான சிறப்புக் கூட்டங்களை 27.10.2025 அன்று 1 முதல் 33 வரை உள்ள வார்டில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் வார்டு பகுதியில் உள்ள பொதுவான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொள்ள, பூங்காக்கள், நீர்நிலைகள், பராமரிப்பு பணி, திடக்கழிவு மேலாண்மை பராமரிப்பு பணி, நகராட்சி பள்ளிகளில் சுகதாரம் மற்றும் அடிப்படை வசதி மேம்படுத்துதல், மழைநீர் சேகரப்பு அமைப்புகளை புனரமைத்தல் போன்ற பணிகள் தொடர்பான கோரிக்கைகளை வார்டு சிறப்புக் கூட்டங்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.