அரசு பள்ளி மாணவர்களுக்கு வண்ண சீருடை அறிமுகம்
திருவாடானை, செப்.25: திருவாடானை அரசு தொடக்கப் பள்ளியில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக புதிய வண்ண சீருடை வழங்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாடானை தாலுகா அலுவலகம் அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் 63 மாணவ, மாணவிகளுக்கு, பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் புதிய வண்ண சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக, வாரத்தின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வண்ண சீருடை அணியும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, இந்த பள்ளியின் மாணவர்கள் வாரம் முழுவதும் ஒரே நிற சீருடை அணிந்து வந்தனர். இதனை மாற்றி, மாணவர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், வண்ண சீருடைகளை வழங்க பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் முடிவு செய்தனர். இதற்கான முயற்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கதிரவன் முழு ஆதரவு அளித்தார்.
இந்த புதிய வண்ண சீருடை வழங்கும் நிகழ்வு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதோடு, மாணவர்களின் மனதிலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் எனப் பலரும் பாராட்டினர்.