ராமேஸ்வரம் கடற்கரையில் 600 கிலோ குப்பைகள் அகற்றம்
ராமேஸ்வரம், செப்.18: சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு, நேற்று ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் தூய்மை பணி நடைபெற்றது. சர்வதேச அளவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் தினம் செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, தேசிய கடலோர ஆராய்ச்சி மையமும் இணைந்து ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் தூய்மைப் பணி நடைபெற்றது. இந்திய கடற்படையின் ராமேஸ்வரம் முகாமின் கட்டளை அதிகாரி தினேஷ் குமார், தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி மாரி கவுடா, மீன்வளத் துறை உதவி இயக்குநர் தமிழ் மாறன், ஓலைக்குடா கிராமத் தலைவர் ஜெரோன்குமார், மரைன் எஸ்.ஐ காளிதாஸ் மற்றும் அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்கச் செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கடற்கரையில் இருந்து சுமார் 600 கிலோ பிளாஸ்டிக் மற்றும் சேதமடைந்த மீன்பிடி வலைகள் சேகரிக்கப்பட்டு நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அரசு கல்லூரி மாணவர்கள், இந்திய கடற்படை, மெரைன் போலீஸ், மீனவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.