அம்மன் கோயில் நடை திறப்பு
சாயல்குடி, ஆக.18: சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடியில் பழமையான உமையநாயகி அம்மன் கோயில் உள்ளது. பொதுவாக ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான அம்மன் கோயிலில் ஆடி மாதத்தில் 10 நாள் திருவிழாக்கள், செவ்வாய், வெள்ளிகளில் சிறப்பு வழிபாடு, பொங்கல் வைத்தல், கூல் காய்ச்சி ஊத்துதல், பால்குடம், அக்னிச்சட்டி, ஆடிப்பூரம், சுமங்கலி பூஜை என விழாக்கோலம் பூண்டு காணப்படும். ஆனால் இந்த கோயிலில் மட்டும் ஆடி மாதம் முழுவதும் கோயில் நடை மூடப்படும்.
அதன்படி ஜூலை 16 ந்தேதி நடை சாற்றப்பட்டது. தொடர்ந்து ஆடி மாதம் முழுவதும் கோயில் பூட்டி இருந்தது. இதனால் பூஜைகள் ஏதும் நடத்தப்படவில்லை. இந்தநிலையில் ஆவணி மாத முதல் நாளான நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட 18 வகை மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது, தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபராதனையுடன் பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.