கும்பரம் ஊராட்சி பகுதியில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு
ராமநாதபுரம், ஆக.18: உச்சிப்புளி அருகே கும்பரம் ஊராட்சியில் கும்பரம், ராமன் வலசை, பூசாரி வலசை, ஏ,டி.நகர், கோகுல் நகர், கல்கண்டு வலசை, கிருஷ்ணா நகர், கும்பரம் வடக்கு, கும்பரம் தெற்கு, மற்றும் படைவெட்டி வலசை, மணியக்கார வலசை கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிவானந்தம் தலைமை வகித்தார். ஆறுமுகம், ராமு, பாலகிருஷ்ணன், தங்கச்சாமி, ராஜேஸ்வரி, கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் முத்துராமு, தாலுகா செயலாளர் கல்யாணசுந்தரம், கதிர்வேல் பேசினர். இதில், கும்பரம் பகுதியில் சுமார் 3 லட்சம் தென்னை மரங்களும், சுமார் 10 லட்சம் பனை மரங்களும் உள்ளன.
நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துப்பயிர் வகை பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இப்பகுதியில் விமானநிலையம் அமைக்க நிலம் தேர்வு செய்வதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் விமான நிலையம் அமைந்தால் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுவர். எனவே இந்தப் பகுதியில் விமான நிலையத்திற்கு நிலம் தேர்வு செய்வதை தவிர்த்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது.