ஸ்காலர்ஷிப் வாங்கி தருவதாக 10 ஆயிரம் ரூபாய் ஏமாற்றியவர் சிக்கினார்
தொண்டி, ஆக.15: தொண்டியை சேர்ந்த கல்லூரி மாணவருக்கு ஸ்காலர்ஷிப் வாங்கி தருவதாக கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரம் பறித்தவர் சிக்கினார். தொண்டியை சேர்ந்த தைனேஸ் மகன் நிசாந்த். கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஜூலை 31ம் தேதி தைனேஸ் போனிற்கு ஒருவர் அழைத்து, உங்கள் மகனுக்கு ஸ்காலர்ஷிப் 35 ஆயிரத்து 500 வந்துள்ளது. அதை உங்கள் கணக்கில் ஏற்ற வேண்டும் என கூறியுள்ளார். இவர், வங்கி விபரங்களை கூறியதால், தைனேஸ் கணக்கில் இருந்து 10 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார். ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் தைனேஸ், அந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் இல்லை. இந்நிலையில் தைனேஸ் தனது உறவினர் பெண் ஒருவர் மூலம், அந்த நபரை தொடர்பு கொண்டதில் பெண்ணிடம் பேச துவங்கியுள்ளார். இதையடுத்து நேற்று திருச்சியில் சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டது. தைனேஸ் மற்றும் பெண் உட்பட சிலர் திருச்சிக்கு சென்றுள்ளனர். பெண்ணை சந்திக்க அந்த நபர் வந்ததும், மறைந்திருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்தனர். அங்கிருந்து தொண்டி போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர். முதல் கட்ட விசாரணையில் அவர், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிய வந்துள்ளது.