விதைத்தது முளைக்குமா? மழையை எதிர்பார்த்து விவசாயிகள்
தொண்டி, அக்.14: தொண்டி, நம்புதாளை மற்றும் சுற்று வட்டார பகுதியில் நெல் விதைத்து விட்டு மழையை எதிர்பார்த்து விவசாயிகள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.
வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்கழஞ்சியமான திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட தொண்டி, நம்புதாளை, முகிழ்த்தகம், திருவெற்றியூர் உள்ளிட்ட பகுதியில் கடந்த 20 நாளுக்கு முன்பு நெல் விதைக்கப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடுமையான வெயிலால் விதைத்த நெல் மணிகள் வீணாகி விடுமோ என் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயி முருகேசன் கூறியது, ஆற்று நீரோ ஊற்று நீரோ இல்லாமல் மழைநீரை மட்டுமே நம்பி இப்பகுதியில் விவசாயம் நடைபெறுகிறது. தற்போது கண்மாய்கள் அனைத்தும் வறண்டு தண்ணீர் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் மழையை நம்பி விதைத்து விட்டு காத்திருக்கிறோம் என்றார்.