கொலை முயற்சி வழக்கில் மீனவருக்கு 7 ஆண்டு சிறை
ராமநாதபுரம், அக். 10: கொலை முயற்சி வழக்கில் மீனவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தேவிப்பட்டினம் அருகே உள்ள பழனிவலசை கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் ராஜேந்திரன் (38), மீன் பிடிக்கும் தொழிலாளி. இவர், கடந்த 2021ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த சக மீனவரான மற்றொரு ராஜேந்திரன் (45) என்பவருடன் தகராறு செய்து, கத்தியால் குத்திக் கொல்ல முயன்றார். இது குறித்து தேவிப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக வழக்கு விசாரணை ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். அதில், ‘சக மீனவரை கொல்ல முயன்ற ராஜேந்திரனுக்கு 7 ஆண்டு சிறை, ரூ.3 ஆயிரம் அபராதம், இதை செலுத்த தவறினால் மேலும் 5 வாரம் சிறை தண்டனை என உத்தரவிட்டார்.