புதிய ரேஷன் கடை பொதுமக்கள் கோரிக்கை
திருவாடானை, ஆக.9: திருவாடானை அருகே ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே சமத்துவபுரம் பகுதியில் கடந்த சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன்கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை மூலம் அப்பகுதியில் உள்ள சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இக்கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாமல் இடிந்து விழுந்து தரைமட்டமானதை அடுத்து, கடந்த சில ஆண்டுகளாக அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் சுவர்களிலும், தளத்திலும் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளதால் தற்சமயம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. ஆகையால் ஏற்கனவே ரேஷன் கடை செயல்பட்டு தற்சமயம் காலியாக உள்ள இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித் தந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.