இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.50 லட்சம் கடற்குதிரை பறிமுதல்
ராமநாதபுரம், அக்.7: ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50லட்சம் மதிப்பிலான கடற்குதிரைகள், கடல் அட்டைகளை மத்திய புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடற்குதிரை, கடல் அட்டை கடத்த இருப்பதாக மதுரை மத்திய புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குழுவினர் ராமநாதபுரம் இசிஆர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படி வந்த கார் பின் தொடர்ந்தனர். அந்த கார் பாரதிநகர் உணவகத்தில் நின்றுள்ளது. காரை சோதனை செய்ததில் அதில் தடை செய்யப்பட்ட கடல் வாழ் அரிய வகை உயிரினமாக கடற்குதிரைகள் பதப்படுத்தப்பட்ட நிலையில் 50 கிலோவும், 20 கிலோ கடல் அட்டையும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தும், கார் டிரைவர் கீழக்கரையை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணைக்காக மதுரை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடற்குதிரை மற்றும் கடல் அட்டையின் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சமாகும்.