பரமக்குடி அருகே நடமாடும் மண் பரிசோதனை முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
பரமக்குடி,ஆக.7: பரமக்குடி சுற்றியுள்ள கிராமங்களில், அதிகமான விவசாய நிலங்களில் சாகுபடி நடைபெற்று வருகிறது. மண் பரிசோதனை செய்யாமல் விவசாயிகள் விவசாய சாகுபடியில் ஈடுபடுவதால், விவசாயத்தில் அதிகமான இழப்புகளை சந்தித்து வருகின்றனர். ஆகையால் பரமக்குடியில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தில் தங்களின் விளைநிலங்களில் உள்ள மண் எடுத்து அதை பரிசோதனை செய்து அதற்கு ஏற்றார் போல விவசாய சாகுபடியில் ஈடுபட்டால் அதிக லாபம் ஈட்ட முடியும். இதுகுறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு, நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தை கொண்டு மண் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று பரமக்குடி அருகே உள்ள திணைகுளம் கிராமத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாமினை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் உமாதேவி, உதவி வேளாண்மை அலுவலர்கள் அங்காள ஈஸ்வரி மற்றும் சண்முகநாதன் மற்றும் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.