போலி வாகன புகை பரிசோதனை சான்றிதழ் ராமநாதபுரம் எஸ்பி.யிடம் புகார்
ராமநாதபுரம், ஆக.7: வாகன புகை பரிசோதனை மைய உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், பொதுச்செயலாளர் ராஜசேகரன் தலைமையில் எஸ்.பி சந்தீஷிடம் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பது, சாயல்குடியில் சின்ன, சின்ன கடைகளில் போலியான கணினி மென்பொருள் மூலம் வாகனங்களை பரிசோதனை செய்யாமல் புகைப்படம் மட்டும் எடுத்து வைத்துக் கொள்கின்றனர்.பின்னர், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள புகை பரிசோதனை மையங்களின் மூலம் போலியான வாகன புகை பரிசோதனை சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.இது வாகனத்திற்கும், உரிமையாளர்களுக்கும் எதிர்காலத்தில் பிரச்னை ஏற்படுத்தக் கூடியது. எனவே இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் மீது போலியான ஆவணங்களை உருவாக்குதல், மோசடி செய்தல் உள்ளிட்ட குற்ற பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அங்கீகாரம் பெற்ற வாகன புகை பரிசோதனை மையம் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொண்டனர்.