உச்சிப்புளி கிராம பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்
மண்டபம்,நவ.6: மண்டபம் மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்நாகாச்சி ஆற்றங்கரை ஆகிய ஊராட்சிகளில் அடங்கிய கிராமப் பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணிகள் துவக்கம் நேற்று நடைபெற்றது. இதில் அரசு அலுவலர் பி.எல்ஓ மகேஸ்வரி வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்காளர்கள் விபரம் குறித்து திருத்தம் பணிகளை செய்வதற்கு படிவத்தை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் பணிகளை கண்காணிக்க மண்டபம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் முத்துக்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கீழக்கரையில் சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு கொண்டு வந்த சிறப்பு வாக்காளர் திருத்தம் குறித்து மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் கீழக்கரை, ஏர்வாடி, இதம்பாடல், உத்திரகோசமங்கை ஆகிய பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து விளக்கம் அளித்தார். அப்போது கீழக்கரை தாசில்தார் செல்லப்பா, துணை தேர்தல் தாசில்தார் கலாதேவி, வருவாய் ஆய்வாளர் வித்யா உடன் இருந்தனர்.