விதிமுறைகளை கடைப்பிடிக்காத பள்ளி வாகனங்களுக்கு அபராதம்
பரமக்குடி, டிச.4: பரமக்குடியில் பள்ளி வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விதிமுறைகளை கடைப்பிடிக்காத வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். பரமக்குடி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர்களை ஏற்றுச் செல்லும் பேருந்துகள் மற்றும் பயணிகளை ஏற்றுச் செல்லும் ஆட்டோ, மினி பேருந்து உள்ளிட்ட 40 வாகனங்கள் பரமக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் சோதனை செய்யப்பட்டது. இதில் விதிமீறல் உள்ள பள்ளி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முன்னதாக தீ மற்றும் விபத்து ஏற்பட்டால் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக வெளியேறுவது குறித்தும், பேருந்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமீறல்கள் குறித்தும் வாகனங்களில் இருந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பள்ளி வாகனங்களில் நிலையான இருக்கைகள், கேமரா, ஓட்டுநர், உதவியாளர் ஆவணங்கள் குறித்து சரிபார்க்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அளவில் பள்ளி வாகனங்கள் உள்ளனவா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.