சாலையில் பூசணி உடைக்க கூடாது: திருவாடானையில் விழிப்புணர்வு
திருவாடானை, செப்.30: திருவாடானை பேருந்து நிலையத்தில், மேலூர் வட்டம், வலைசேரிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர், சாலையில் கண் திருஷ்டிப் பொருட்களை உடைப்பது, வெடி வெடிப்பது, பூ மாலைகளை வீசிச் செல்வது போன்ற ஆபத்தான செயல்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் கால்நடைகளுக்கான அபாயங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.ஒரு கையில் பூசணிக்காயும் மறு கையில் தேங்காயும் ஏந்தி, கழுத்தில் ‘‘சாலை பாதுகாப்பான பயணத்திற்கு மட்டுமே, செயற்கையான விபத்தை ஏற்படுத்த அல்ல”, ‘‘சாலை, பொது வீதியில் கண் திருஷ்டி பொருட்களை உடைக்க வேண்டாம்”, ‘‘சாலையின் மேல் வெடி வெடிக்க வேண்டாம்” போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அணிந்தபடி நின்றார்.
பின்னர் சாலைகளில் சிதறும் பூசணிக்காய், தேங்காய் துண்டுகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்துக்கு உள்ளாவதையும், பூ மாலைகளை கால்நடைகள் உண்பதால் ஏற்படும் உடல்நலக் கேடுகளையும் விளக்கி, பொதுமக்கள் சாலை விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பான சூழலை உருவாக்க பங்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.