பகுதிநேர ரேஷன் கடை திறக்க வலியுறுத்தல்
திருவாடானை, நவ.28: திருவாடானை அருகே கூகுடி பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை மூலம் கூகுடி, அறிவித்தி, அந்திவயல், அறநூற்றிவயல் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 450க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது நுகர்பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் அறிவித்தி, அந்திவயல் மற்றும் அறநூற்றிவயல் உள்ளிட்ட மூன்று கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள கூகுடி பகுதியில் செயல்படும் இந்த ரேஷன் கடைக்கு ஒவ்வொரு மாதமும் நடந்து சென்று நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருந்து பொருட்களை வாங்கி செல்லும் சூழல் உள்ளது.
மேலும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த ரேஷன் கடைக்கு தங்களது நுகர் பொருட்களை வாங்கச் செல்லும் இந்த மூன்று கிராம மக்கள் அன்றைய தினத்தன்று கூலி வேலைக்கு செல்லமுடியாது. இந்நிலையில் கடந்த சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மூன்று கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அந்திவயல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் ஒரு சில மாதங்கள் மட்டும் பகுதிநேர ரேஷன் கடை செயல்பட்டுள்ளது.
அந்த பகுதிநேர ரேஷன் கடை செயல்பட்ட தனியாருக்கு சொந்தமான கட்டிடம் சேதமடைந்து விட்டதால், அந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டனர். இதனால் ஒரு சில மாதங்களிலேயே அங்கு செயல்பட்ட பகுதிநேர ரேஷன் கடை மூடப்பட்டது. ஆகையால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள கூகுடி பகுதிக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் அந்திவயல் பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்து, அதில் மூடப்பட்ட பகுதிநேர ரேஷன் கடையை மீண்டும் திறக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.