குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுமிகள் தப்பியோட்டம்
Advertisement
சிவகங்கை, டிச. 9: சிவகங்கையில் சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 3 சிறுமிகள் தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை வள்ளி நகரில் சமூக நலத்துறை சார்பில் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 56 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு இங்கு தங்கியிருந்த தேவகோட்டை, மானாமதுரை, காளையார்கோவில் பகுதிகளைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் காப்பகத்தில் உள்ள கழிவறை ஜன்னல் வழியாக தப்பிச் சென்றனர். தப்பிய சிறுமிகளில் இருவர் 14 வயதும், ஒருவர் 16 வயதும் உடையவர்கள். இச்சம்பவம் குறித்து காப்பக வார்டன் பாக்கியலட்சுமி சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பிய சிறுமிகளை தேடி வருகின்றனர்.
Advertisement