குவாரி விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு
சிவகங்கை, ஆக.5: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 386 மனுக்கள் பெறப்பட்டது.
தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கடந்த மே மாதம் சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரி விபத்தில் மரணமடைந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நபரின் குடும்பத்தினரிடம் ரூ.3லட்சத்திற்கான முதலமைச்சர் பொது நிவாராண நிதிக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துகழுவன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.